செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், அதன் மூலம் உருவாக்கப்படும் போலியான காணொலிகளும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. அந்த வகையில், இந்தியாவை மிகவும் மோசமாக சித்தரிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு போலி ஏஐ காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில் ஒருவர் குப்பைகள் நிறைந்த இடத்தில் தனது வயிற்றின் மீது ரொட்டிகளைத் தயாரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் காணொலி பல கோடி முறை பார்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தக் காணொலியைப் பார்த்த பலரும் அது உண்மையான சம்பவம் என நம்பும் சூழல் ஏற்பட்டது. இதனால் இந்தியாவைப் பற்றிய தவறான கருத்துகள் உலக அளவில் உருவாகும் அபாயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் நீண்ட காலமாக வசித்து வரும் அமெரிக்காவைச் சேர்ந்த கிரிஸ்டன் ஃபிஷர், இந்தக் காணொலிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட எதிர்வினைக் காணொலியில், இது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலியான காட்சி என அவர் தெரிவித்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Kristen Fischer (@kristenfischer3)

மேலும், இதுபோன்ற காணொலிகள் மூலம் இந்தியாவை வேண்டுமென்றே மோசமாக சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது என கிரிஸ்டன் ஃபிஷர் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் இதுபோன்ற காட்சிகளே காணப்படுகின்றன என்ற எண்ணத்தை இதுபோன்ற போலி காணொலிகள் ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா அழகான நாடு என்றும், இங்கு சிறந்த மனிதர்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உண்மைத்தன்மையை சரிபார்க்காமல் சமூக வலைதளங்களில் பரவும் காணொலிகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கிரிஸ்டன் ஃபிஷரின் இந்தப் பதிவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். போலியான காணொலிகளை உருவாக்கி ஒரு நாட்டின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளைத் தடுக்க வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் காணொலிகளைப் பகிர்வதற்கு முன்பு அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்வது அவசியம் எனவும் இணையவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.