
இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளித்த கமல்ஹாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்..
ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணமடைந்ததை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசனிடம் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவு கேட்டிருந்தார். இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாக குழு – செயற்குழு கூட்டம் இன்று காலை 11:30 மணியளவில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதசார்பற்ற போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும், எனது நண்பரும், பகுத்தறிவு பகலவன் பெரியாரின் பேரருமான திரு ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கூடி ஏக மனதாக முடிவு எடுத்துள்ளோம்.
அவரது வெற்றிக்காக நானும், எனது கட்சியினரும் வேண்டிய உதவிகளை செய்வோம் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறேன். 18 வயதை பூர்த்தி அடைந்த ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்காளர்கள் அனைவரும் தேர்தல் நாளில் திரு ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களுக்கு வாக்களித்து அவரை பெறுவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக திரு ஆ.அருணாச்சலம் எம்.ஏ, பி.எல் அவர்களை நியமிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கும் கமலின் முடிவு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்தார்.
இந்நிலையில் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளித்த கமல்ஹாசனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான திரு. ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களுக்குத் தமது ஆதரவை வழங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான திரு. @EVKSElangovan அவர்களுக்குத் தமது ஆதரவை வழங்கியுள்ள @maiamofficial கட்சித் தலைவர் திரு. @ikamalhaasan அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். https://t.co/nlQqIbDJdc
— M.K.Stalin (@mkstalin) January 25, 2023