கடந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி மோர்பி நகரத்தில் மச்சு  நதிக்கு குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 135 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த பாலத்தின் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை ஒரேவா  குழுமத்திற்கு சொந்தமான கடிகாரம் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளும் அஜந்தா நிறுவனம் மேற்கொண்டது. இது தொடர்பான வழக்கை குஜராத் உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை இந்த வழக்கு  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சோனியா கோகனி, நீதிபதி சந்தீப் பாட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையின் போது விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும் கடுகாயம் அடைந்த நபர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் இடைக்கால இழப்பீடாக நான்கு வாரங்களுக்குள் வழங்குமாறு ஒரேவா  குழுமத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். முன்னதாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது விபத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், படுகாயம் அடைந்தவர்களுக்கும் சேர்த்து மொத்தமாக ரூ.5 கோடியை இழப்பீடாக அளிப்பதாக ஒரேவா  குழுமத்தின் சார்பாக கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த இழப்பீடு தொகை என்பது போதுமானது இல்லை என நீதிபதிகள் கூறியுள்ளனர்.