இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. மோசடி நபர்கள் போலியான குறும் தகவல்கள் மற்றும் அழைப்புகள் மூலம் நமது வங்கி கணக்கு குறித்த விவரங்களை அறிந்து கொண்டு பணத்தை திருடி விடுகின்றனர். அலட்சியமாக போலி மெசேஜ் மற்றும் போன் கால்களை நம்பி பணத்தை இழந்து விடுகிறோம். இது போன்ற போலி அழைப்புகள் மற்றும் குறுந்தகவலை அடையாளம் காண்பது என்பது பலருக்கும் சிரமமான ஒன்றாக உள்ளது. இதனை தவிர்ப்பதற்கான வழிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

உங்களுக்கு தெரியாத எண்ணில் இருந்து எச்சரிக்கை மெசேஜ் வந்தால் அது போலியானது என்பதை நீங்கள் எளிதில் கண்டறிந்து விடலாம். ஏனென்றால் உங்களுடைய வங்கி கணக்கில் இருந்து வரக்கூடிய அனைத்து மெசேஜ்களும்  VM – ICICI Bank, AD – ICICI BN, JD – ICICIBK  என்பதைப் போல இருக்கும். அதாவது எந்த வங்கியும் தனிப்பட்ட நம்பரில் இருந்து மெசேஜ் அனுப்பாது.

உங்களுக்கு வரும் மெசேஜ்களை கவனமாக வாசிக்க வேண்டும். அதில் பிழை ஏதாவது இருந்தால் அதற்கு பதில் அளிக்கக்கூடாது.

உங்களுக்கு பரிசு கிடைத்துள்ளது என்று கூறி மொபைல் நம்பருக்கு மெசேஜ் வந்தால் அதனை பொருட்படுத்த வேண்டாம். ஏனென்றால் வங்கியில் இருந்து ஒருபோதும் இலவசமாக பரிசு கொடுக்க மாட்டார்கள்.

அதனைப் போலவே இது போன்ற மெசேஜ்களில் வரும் லிங்கை ஒருபோதும் கிளிக் செய்யக்கூடாது.