ராஜஸ்தான் மாநிலம் ஜல்லூர் பகுதியை சேர்ந்தவர் வீரேந்திர சிங். இவர் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கூலிப் போன்ற போதை பொருட்களை தூத்துக்குடி மாவட்டத்திற்கு காரில் கடத்தி சென்றுள்ளார். அப்போது கரூர் மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கார் டயர் பஞ்சரானதால் வீரேந்திர சிங் அதனை சரி செய்ய முயன்றுள்ளார்.

ஆனால் அவரால் சரி செய்ய முடியாமல் மெக்கானிக்கை வரவழைத்து சரி செய்து கொண்டிருந்தார். அப்போது வீரேந்திர சிங்கின் நடவடிக்கைகளை பார்த்து மெக்கானிக்கிற்கு சந்தேகம் வந்ததால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீரேந்திர சிங்கையும் அவரது காரையும் சோதனை செய்தனர். அப்போது காரில் 25 மூட்டைகள் போதை பொருட்கள் இருந்தது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேலாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் வீரேந்திர சிங்கிடம் விசாரணை நடத்தனர். பின்பு அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 25 மூட்டைகள் போதைப் பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு உபயோகப்படுத்திய கார் இரண்டையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.