
பெங்களூரு கோதண்டராமபுரத்தில் ஆடிட்டர் ஒருவர் வசித்து வருகிறார். இவரிடம் ராஜேஷ் என்பவர் 10 ஆண்டுகளாக டிரைவராக வேலை பார்த்து வருவதால் அவர் மீது ஆடிட்டருக்கு அதீத நம்பிக்கை இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடிட்டர் ராஜேஷிடம் ஒரு பையை கொடுத்து காரில் வைக்குமாறு கூறியுள்ளார்.
அதில் பணம் இருந்ததையும் தெரிவித்தார். இதனையடுத்து ஆடிட்டர் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது காரும் இல்லை ராஜேஷும் இல்லை. உடனே ராஜேஷை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போது மருந்து வாங்க வந்திருப்பதாகவும் பத்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்து விடுவேன் என கூறியதாகவும் தெரிகிறது. அதன் பிறகு அவர் வரவில்லை.
அவரது செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுகுறித்து ஆடிட்டர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராஜேஷ் பிடித்து விசாரித்த போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
ஆடிட்டர் கொடுத்த பணத்திலிருந்து ஒரு லட்ச ரூபாயை குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க ராஜேஷ் பயன்படுத்தியுள்ளார். மீதி பணத்தை கோவில் உண்டியலில் போட்டு விட்டதாக கூறினார். கோவில் உண்டியலில் போட்ட பணத்தை தர முடியாது என கோவில் நிர்வாகத்தினர் கூறியதால் என்ன செய்வது என்று தெரியாமல் ஆடிட்டரும் போலீசாரும் திகைத்து நின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.