உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஸ்ரீ குரு ராம் ராய் மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவ மாணவி தன்வி தற்கொலை செய்துகொண்ட விவகாரம், தற்போது பல்வேறு திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. மாணவி தன்வி, உயிரிழப்பதற்கு முன்னதாக தனது துறைத் தலைவருடன் பேசிய ஆடியோ பதிவை தனது தந்தைக்கு அனுப்பியது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் அரை மணி நேரம் ஓடும் அந்த ஆடியோ பதிவில், மாணவி தன்வி தனது துறைத் தலைவரான டாக்டர் பிரியங்கா குப்தாவிடம் மிகவும் வருத்தத்துடன் பேசுவது பதிவாகியுள்ளது. அதில் “மேடம், நான் யார் யாரைத் தான் திருப்திப்படுத்துவது? என்னால் இதற்கு மேல் என்ன செய்ய முடியும்? நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஒருநாள் குழப்பம் காரணமாகத்தான் வகுப்பிற்கு வரவில்லை, மற்றபடி நான் யாரையும் தொந்தரவு செய்ததில்லை என்று தன்வி அழுதபடி கூறியுள்ளார்.
அம்பாலாவில் உள்ள தன்வியின் தந்தை டாக்டர் லலித் மோகன் கூறுகையில், “மார்ச் 24-ஆம் தேதி இரவு 9 மணிக்கு தன்வி என்னிடம் ஒரு மணி நேரம் பேசினாள். அவள் மிகவும் மன உளைச்சலில் இருந்தாள். அவளை சமாதானம் செய்துவிட்டு, அடுத்த நாள் நேரில் வருவதாகக் கூறினேன்.
ஆனால், நள்ளிரவு 2:30 மணிக்கு நான் டேராடூன் வந்து பார்த்தபோது, பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் அவள் மயக்க நிலையில் கிடந்தாள். காரின் கண்ணாடியை உடைத்து அவளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம், ஆனால் அவள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டாள்,” என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்துக் கல்லூரி நிர்வாகம் போலீசாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் சில முக்கியத் தகவல்களைத் தெரிவித்துள்ளது. அதில் மாணவி தன்வி கடந்த இரண்டு ஆண்டுகளாக மனநலப் பாதிப்பிற்குச் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் இரண்டு முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். துறைத் தலைவருக்கும் மாணவிக்கும் இடையே சுமுகமான உறவே இருந்துள்ளது. தற்கொலைக்குத் தூண்டும் வகையில் யாரும் செயல்படவில்லை என்றும், உண்மை நிலையை அறிய விரிவான விசாரணை தேவை என்றும் நிர்வாகம் கோரியுள்ளது.
மேலும் முதுகலை மருத்துவ மாணவியின் மரணம் குறித்து முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரமேந்திர சிங் தோபால் கூறுகையில், “இது மிகவும் உணர்ச்சிகரமான வழக்கு. மாணவியின் மருத்துவக் குறிப்புகளை ஆய்வு செய்ய மருத்துவக் குழு ஒன்று அமைக்கப்படும். பிரேதப் பரிசோதனையில் விஷம் உட்கொண்டது தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம்,” என்றார்.
