குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை இன்று காஞ்சிபுரத்தில் முதலமைச்சர்  முக ஸ்டாலின்  தொடங்கி வைத்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, மகளிர் உரிமைத் திட்டத்தை இன்று முதலமைச்சர் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி, இன்று சுமார் 1 கோடியே 6 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதற்காக பயனாளிகளின் வங்கிக்கணக்குகளில் பணம் செலுத்தும் பணி நேற்றே பல இடங்களில் தொடங்கியிருந்தது.

இதனையடுத்து தவறுதலாக முன்கூட்டியே பணம் அனுப்பியதாக சிலர் விமர்சித்த நிலையில், நடைமுறை காரணங்களுக்காக அவ்வாறு வரவு வைக்கப்பட்டதாக பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர். மேலும் ஒரு கோடி பேருக்கு பணம் செலுத்த 24 மணி நேரம் தேவைப்படும் என்பதால் முன்கூட்டியே அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தனர்.