சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்படவுள்ள “முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச்சின்னத்திற்கு” 15 நிபந்தனைகளுடன் தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்திற்கு(CRZ) அனுமதி வழங்கி இருக்கிறது. தற்போது மத்திய அமைச்சகம் விதித்திருக்கும் சில நிபந்தனைகளை தெரிந்துக்கொள்வோம். அதன்படி, கட்டுமானத்துக்கு முன் திட்ட தளத்திலிருந்து 800 மீட்டர் தொலைவிலுள்ள ஐஎன்எஸ் அடையாரின் ஆட்சேபனை சான்றிதழ் பெறவும்.

அரிப்பு மற்றும் திரட்டல் ஆய்வுகள் கண்காணிப்பு செய்யப்படவும். கூட்டத்தை நிர்வகித்தல் மற்றும் அவசரகால வெளியேற்றத் திட்டங்கள் குறித்த அறிக்கைகள் பிராந்திய சுற்றுச்சூழல் அலுவலகத்துக்கு வழங்கப்படவேண்டும். நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயத்தின் எந்த உத்தரவும் (அ) வழிகாட்டுதலும் கண்டிப்பாக பின்பற்றப்படவும். CRZ அனுமதி கடிதம் தேசிய பசுமை தீர்ப்பாயம், தெற்கு மண்டலத்தின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டது போன்றவை முக்கிய நிபந்தனைகள்.

சென்னையை சேர்ந்த ஹூபர்ட் என்விரோ கேர் சிஸ்டம்ஸ் இத்திட்டத்துக்கான உள் கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆலோசகராக இருந்தது. அமைச்சகத்தின் ஒப்புதலின் படி திட்டத்தை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கையை பொதுப் பணித்துறை தயாரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. வங்காள விரிகுடாவில் அமைக்கப்படவுள்ள இந்த நினைவுச் சின்னத்திற்கு வரவேற்பும், விமர்சனமும் ஒருங்கே இருக்கிறது. மக்கள் மத்தியில் இந்த திட்டம் குறித்து என்ன கருத்துகள் நிலவுகிறது என்பது சரியாக தெரியாவிட்டாலும், சீமான் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.