டெல்லி மஜ்னூ கா டில்லா பகுதியில், 22 வயதான பெண் ஒருவரும் 6 மாத குழந்தையும் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது. இந்த கொலை தொடர்பாக உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நிகில் (24) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹல்த்வானியில் தலைமறைவாக இருந்த அவரை, பல மாநிலங்களில் நடத்திய விரிவான தேடலுக்குப் பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2023-ஆம் ஆண்டு ஹல்த்வானியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிகிலும் சோனலும் சந்தித்ததாக கூறப்படுகிறது. அவர்கள் பின்னர் காதலாகி, திருமணமாகாமல் இணைந்து வாழத் தொடங்கினர். பின்னர் சோனல் கர்ப்பம் கொண்ட நிலையில், பொருளாதார சிக்கலால் குழந்தையை வளர்க்க முடியாது என்று முடிவு செய்த இருவரும், குழந்தையை அல்மோரா பகுதியில் ரூ.2 லட்சத்திற்கு விற்றதாக போலீசார் தெரிவித்தனர். இந்த பணத்துடன் தில்லிக்கு வந்த இருவரும் முதலில் வாசிராபாத்திலும் பின்னர் மஜ்னூ கா டில்லாவிலும் குடியேறினர்.

இதனிடையே சோனல், ரஷ்மி எனும் பெண்ணுடன் நெருக்கமாக பழகியதாகவும், நிகிலுடன் அடிக்கடி சண்டை வந்ததைத் தொடர்ந்து ரஷ்மியின் வீட்டில் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. சோனல் மீண்டும் கர்ப்பமாகியிருந்ததாகவும், நிகில் அந்தக் குழந்தையை வளர்க்க விரும்பிய நிலையில், சோனல் அவரது அனுமதியின்றி கருக்கலைப்பு செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இதன் பின்னணியில், சோனல் தனது குழந்தையை சுமந்திருக்க கூடாது என்ற நிகிலின் சந்தேகம் கடும் கோபமாக மாறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த ஜூலை 9-ஆம் தேதி மதியம் 1 மணியளவில், ரஷ்மி மற்றும் அவரது கணவர் துர்கேஷ் பள்ளியில் இருந்து மகளைக் கொண்டு வருவதற்காக சென்றிருந்தனர். வீட்டில் சோனலும், 6 மாத குழந்தையுமான துர்கேஷ் – ரஷ்மியின் மகளும் மட்டுமே இருந்தனர். இந்த நேரத்தில் நிகில் வீட்டுக்குள் நுழைந்து, சோனலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும், அதற்குப் பிறகு குழந்தையைப் பார்த்து “என் குழந்தையை நீ அழுதாய்” எனக் கூறி அதையும் கொடூரமாக கொலை செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் தனது மொபைல் போனை விட்டு விட்டு தப்பியோடிய நிகில், தற்கொலை செய்வதற்கு முயற்சித்துள்ளார். ஆனால் அது கை கொடுக்காததால் பின்னர் ஹல்த்வானிக்கு தப்பிச் சென்றார். பின்னர் போலீசார் நடத்திய தீவிர தேடலின் முடிவாக, அவர் மறுநாள் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்ற காவலில் இருந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த இரட்டை கொலை சம்பவம் தில்லி மக்களிடையே பெரும் சோகத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.