தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள எம்.ராசியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதத்தின் மகள் இந்திராணி (37). இவர் குடும்ப பிரச்சனையால் கணவரை பிரிந்து 12 வயது  மகனுடன் வாழ்ந்து வந்தார். ஆலங்குடியில் உள்ள ஒரு கடலை மில்லில் வேலை செய்து வந்த இந்திராணி, இரண்டாவது முறையாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானையைச் சேர்ந்த முருகனை 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பின் முருகன், மனைவியுடன் எம்.ராசியமங்கலத்தில் வாழ்ந்து வந்தார். ஆனால், இந்த தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தன. சமீபத்தில், ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமாக மாறி, முருகன் வீட்டில் இருந்த அரிவாளால் இந்திராணியைத் தாக்கினார். இதனால் பலத்த காயமடைந்த இந்திராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற தாயார் லட்சுமிக்கும் கையில் காயம் ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தகவலறிந்த ஆலங்குடி போலீஸ் டிஎஸ்பி கலையரசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இந்திராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து குற்றவாளியான முருகனை கைது செய்தனர். இந்த கொடூரமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.