இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் அரவிந்த டி சில்வாவின் இல்லத்தில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேன சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு, கொள்ளுப்பிட்டியா பகுதியில் உள்ள பெட்ரிஸ் பிளேஸ் எனும் இடத்தில் அரவிந்த டி சில்வாவுக்குச் சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் தங்கியிருந்த கபில சந்திரசேன, வெள்ளிக்கிழமை காலை மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்த கொழும்பு முதன்மை மாஜிஸ்திரேட் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், உடற்கூறாய்வு அறிக்கைக்குப் பின்னரே உண்மை நிலவரம் தெரியவரும் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கபில சந்திரசேன மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோர் நெருங்கிய உறவினர்கள் ஆவர். கபிலவின் மனைவி பிரியங்கா நியோமாலியும், அரவிந்த டி சில்வாவின் மனைவி அனுஷ்கா டி சில்வாவும் சகோதரிகள் முறை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வியாழக்கிழமை கபில சந்திரசேன, டி சில்வாவின் வீட்டிற்கு வந்துள்ளார்‌

மறைந்த கபில சந்திரசேன கடந்த சில காலங்களாக பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கியிருந்தார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான விமானங்களை வாங்கியதில், சுமார் 20 லட்சம் டாலர் வரை லஞ்சம் பெற்றதாக இவர் மீதும், இவர் மனைவி மீதும் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்த நிலையில் இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு இலங்கையின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க நேரில் வந்து நிலைமையைக் கேட்டறிந்தார். 1996-ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் விளாசியதுடன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வரலாற்று வெற்றிக்கு வித்திட்டவர் அரவிந்த டி சில்வா. கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த வீரராகக் கருதப்படும் டி சில்வாவின் வீட்டில் நடைபெற்ற இந்தச் சம்பவம் விளையாட்டு மற்றும் அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.