ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உலகம் முழுவதும் புகழ்பெற்றிருந்தாலும், சமீபகாலமாக சில வீரர்களின் செயல்பாடுகள் பிசிசிஐ-க்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து, அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் பிசிசிஐ செயலாளர் தரப்பிலிருந்து மிகக் கடுமையான எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பிசிசிஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவு (ACU) நடத்திய ஆய்வில் சில அதிரவைக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன. வீரர்களின் பெண் தோழிகள் மற்றும் சமூக வலைத்தள ‘இன்ஃப்ளூயன்ஸர்கள்’, வீரர்களின் டிரெஸ்ஸிங் ரூம், ஹோட்டல் அறைகள் மற்றும் அணி ஆலோசனைக் கூட்டங்கள் வரை தடையின்றி நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தங்களது பாலோயர்களை அதிகரிக்க, ரகசியமான இடங்களிலிருந்து ‘ரீல்ஸ்’ மற்றும் வீடியோக்களை எடுத்து வெளியிடுவது பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. இது ‘ஹனி ட்ராப்’ மற்றும் மேட்ச் பிக்ஸிங் போன்ற விபரீதங்களுக்கு வழிவகுக்கும் என பிசிசிஐ அஞ்சுகிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட்டை விட சர்ச்சைகளே அதிகம் வைரலாகின. ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் டிரெஸ்ஸிங் ரூமில் ‘வேப்பிங்’ (Vaping) செய்த வீடியோவும், யுஸ்வேந்திர சஹால் விமானப் பயணத்தின் போது வேப்பிங் செய்ததும் கடும் விமர்சனத்திற்குள்ளானது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு பொருளைப் பொதுவெளியில் பயன்படுத்திய வீரர்களுக்கு பிசிசிஐ அபராதம் விதித்ததோடு, இனி இத்தகைய செயல்களைப் பொறுக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இனிமேல் வீரர்கள் யாரைச் சந்திக்கிறார்கள், யார் அவர்களைப் பார்க்க வருகிறார்கள் என்பதை எழுத்துப்பூர்வமாக அணி நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு சந்திப்பையும் தேதி வாரியாகப் பதிவு செய்ய தனிப் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.
மைதானத்தில் கிரிக்கெட்டை விட, அணி உரிமையாளர்களின் ஆதிக்கம், வீரர்களுடனான மோதல் மற்றும் டிரெஸ்ஸிங் ரூம் அரசியல் ஆகியவை வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியுள்ளன. இது தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் தொடங்கியுள்ளதால், பிசிசிஐ இந்த ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதிப்பிரமாண்ட பணம் மற்றும் புகழால் வரும் தலைக்கனம், கிரிக்கெட்டின் கண்ணியத்தைச் சிதைக்க அனுமதிக்க முடியாது என்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது.
