
ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு மற்றும் என் இ டபிள்யூ எனப்படும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் இணைந்து இந்தியாவில் மொத்தம் உள்ள 31 மாநிலங்களில் ஆய்வு செய்து பணக்கார முதல்வர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் தேர்தல் பிரமாணம் பத்திரங்களை ஆய்வு செய்து அதன் மூலம் தயார் செய்யப்பட்டுள்ளது.இந்த பட்டியலின்படி இந்தியாவில் உள்ள மொத்த முதல்வர்களின் சொத்து மதிப்பு 1630 கோடியாக இருக்கும் நிலையில் முதலிடத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 931 கோடியாக இருக்கிறது.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி 30 கோடி சொத்துடன் ஏழாம் இடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சுமார் 8 கோடி சொத்துடன் 14ஆம் இடத்தை பிடித்துள்ளார். முதல்வர்களின் கடன் பட்டியலும் வெளியாகியுள்ள நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எந்த கடனும் இல்லை என்று அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு எந்த முதல்வர்களின் மீது அதிகமாக கிரிமினல் வழக்குகள் இருக்கிறது என்ற பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இருக்கிறார். இவர் மீது மொத்தம் 89 வழக்குகள் உள்ளது. இதில் 72 க்கும் மேற்பட்ட வழக்குகள் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்கள். இவருக்கு எதிராக இரண்டு குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக முதல்வர் ஸ்டாலின் இரண்டாம் இடத்தில் அதிக கிரிமினல் வழக்குகள் கொண்ட முதல்வர்கள் பட்டியலில் இருக்கிறார். அதன்படி இவர் மீது மொத்தம் 47 கிரிமினல் வழக்குகள் உள்ளது. இதில் 12 வழக்குகள் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படக்கூடிய குற்றங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.