
இந்தியா முழுவதும் அடுத்த வருடம் மத்திய அரசு தொகுதி வரையறை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கு மாநில அரசுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. ஏனெனில் தொகுதி மறு வரையறை செய்தால் தென் மாநிலங்களுக்கு எம்பிகள் தொகுதி குறையும் என்பதால் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்ற நிலையில் அந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டுக்குள் அமைக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் இது தொடர்பாக மாநிலங்களுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்ட நிலையில் இன்று தொகுதி மறு வரையறை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் மாநில முதல்வர்கள் கலந்து கொண்டுள்ள ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கும் நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உட்பட ஏழு மாநிலங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் என மொத்தம் 24 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த தொகுதி மறு வரையறை கூட்டுக்குள்ள கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு தமிழகத்தின் சிறப்புமிக்க புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதன்படி பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை, கன்னியாகுமரி கிராம்பு, ஈரோடு மஞ்சள், கோவில்பட்டி கடலை மிட்டாய், கொடைக்கானல் பூண்டு போன்றவைகள் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும் மகளிர் சுய உதவி குழு தயாரித்த அழகிய பெட்டிகளில் இந்த பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.