தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் முரளி ராமசாமி தலைமையிலான அணியினர் வெற்றியடைந்தனர். வெற்றியடைந்த நிர்வாகிகள் தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதையடுத்து தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி ராமசாமி கூறியதாவது “தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றிபெற்ற நாங்கள் மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்து அவரது வாழ்த்துக்களை பெற்றோம். எங்களது கோரிக்கை மனுவையும் அவரிடம் அளித்திருக்கிறோம்.

கடந்த 2009-ம் வருடம் திரைத்துறையை சேர்ந்தவர்களுக்காக சென்னையை அடுத்துள்ள பையனூர் அருகில் 100 ஏக்கர் நிலத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி வழங்கினார். இதில் 10.5 ஏக்கர் நிலமானது நலிந்த தயாரிப்பாளர்களுக்கு வீடு கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டது. எனினும் அந்த உத்தரவு காலாவதியாகி இருந்தது. இந்நிலையில் அந்த அரசாணையை மீண்டும் முதல்வர் புதுப்பித்து உள்ளார். அதற்காக நன்றி தெரிவித்தோம். தமிழ்நாடு அரசின் நல்லுறவோடு தயாரிப்பளார் சங்கம் பல திட்டங்களை முன்னெடுத்து செல்ல உள்ளது என்று அவர் கூறினார்.