முதல்வர் மு.க. ஸ்டாலின் சமீப காலமாக அரசு துறைகளில் பயன்படுத்தப்படும் சில சொற்களுக்கு பெயர் மாற்றம் செய்து, அதனை மனிதநேயம் மற்றும் மரியாதை மிக்க வகையில் மாற்றி அறிவித்து வருகிறார்.

“கல்வியில் தலைசிறந்த தமிழ்நாடு” என்ற நிகழ்ச்சியில் ஒருவரை துப்புரவு பணியாளர் என்று குறிப்பிட்ட போது, அதை உடனே திருத்தி “இனி அவர்கள் தூய்மை பணியாளர்கள் என அழைக்கப்பட வேண்டும்” என்று முதல்வர் அறிவித்தது பரவலாக பாராட்டப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, மருத்துவ துறையிலும் பேஷண்ட் (Patient) என்ற சொல்லுக்கு பதிலாக பயனாளிகள் என மாற்றம் செய்ய வேண்டும் என அவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த பெயர் மாற்ற நடவடிக்கைகள் சமூகத்தில் மரியாதை மற்றும் இனிய மொழிப்பயன்பாட்டை ஊக்குவிக்கிறது என்ற பாராட்டுகளும், அரசியல் நோக்கத்துடன் செய்கிறார் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இதற்கிடையில், அதிமுக தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி திருச்செங்கோடு பொதுக்கூட்டத்தில் பேசும்போது இந்த முடிவை கடுமையாக விமர்சித்தார். “பத்திரிகையில் பார்த்தேன் — மருத்துவமனைக்கு சென்றால் இனி பேஷண்ட் என்று சொல்லக்கூடாதாம், பயனாளி என்று சொல்லணும் என்கிறாராம். பெயர் வைப்பதற்கு இவ்வளவு திட்டமிட வேண்டாமே! ஸ்டாலின் அவர்களே, தயவுசெய்து எல்லாரையும் மாத்த வேண்டாம்; அப்பா, அம்மா பெயரையும் மாத்திடாதீங்க,” என்று நையாண்டி செய்து கூட்டத்தை சிரிக்க வைத்தார்.

“>

 

“முதல்வராக ஆன பிறகு பார்க்கும் ஒரே வேலை பெயர் மாற்றம்தான்!” என எடப்பாடி பழனிசாமி கூறியதும், சுற்றியிருந்த மக்கள் ஆரவாரத்துடன் கைதட்டினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, இரு தரப்பினரிடமும் கடும் அரசியல் விவாதத்தை தூண்டியுள்ளது.