
வங்கதேச அரசியலில் சுழற்சி ஏற்பட்டு வரும் நேரத்தில், இடைக்கால அரசாங்கத் தலைவர் பேராசிரியர் முகமது யூனுஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய மாட்டார் என அவரது சிறப்பு உதவியாளர் ஃபைஸ் அகமது தயாப் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தார். யூனுஸ் அதிகார ஆசையினால் பதவியில் இல்லை என்றும், தற்போதைய சூழலில் ஜனநாயக மாற்றத்திற்கு அவர் அவசியமானவர் என்பதால் பதவியில் தொடர இருப்பதாகவும் அவர் கூறினார்.

முகமது யூனுஸ் சமீபத்தில் தனது ஆலோசனைக் குழுவுடன் மற்றும் அரசுக்குழு உறுப்பினர்களுடன் சந்திப்பு நடத்தினார். அந்த சந்திப்புக்குப் பிறகு, ஒத்துழைப்பு இல்லாத சூழல் காரணமாக யூனுஸ் அதிருப்தியடைந்ததாகவும், அவர் பதவியை விலக யோசித்து வருகிறார் என்ற தகவல்கள் வங்கதேச அரசியல் வட்டாரங்களில் பரவின. இதையடுத்து, யூனுஸ் பதவி விலகும் வாய்ப்பு குறித்து பல ஊகங்கள் உருவாகின.
ஃபைஸ் தயாப், “அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் வங்கதேச தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் யூனுஸுக்கே உண்டு,” என்றார்.
மேலும், அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றாகக் கலந்துரையாட வேண்டும்; யாரும் தனிமைப்படுத்தப்படக் கூடாது என்றும், ராணுவம் அரசியலில் தலையிடக்கூடாது என்றாலும், அவர்களை மதித்து நம்பிக்கையுடன் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.