புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் மீன்பிடிக்கச் சென்ற போது, 19 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால்மேடு பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரின் நாட்டுப்படகில், மீனவர்கள் முருகானந்தம், சைந்தவன் (19) மற்றும் மூன்று பேர் உள்ளிட்ட ஐந்து பேர் இன்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

மீனவர்கள் கடலுக்கு ஆழத்திற்குள் சென்று மீன் பிடித்து விட்டு கரை திரும்பிக் கொண்டிருந்த போது, கடல் சீற்றம் காரணமாக சைந்தவன் எதிர்பாராதவிதமாக படகிலிருந்து தவறி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் சைந்தவனை உடனடியாக மீட்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

ஆனால் 2 மணி நேரத்துக்கும் மேலாக தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து  சைந்தவனின் உடல் கரையை நெருங்கி வந்ததைக் கண்ட சக மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர். அவரது உடலை பார்த்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கதறி அழைத்தனர்.

தகவலறிந்த நகர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சைந்தவனின் உடலை கைப்பற்றி மருத்துவக் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.