கேரள மாநிலத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை என்பது அதிகரித்துவிட்ட நிலையில் இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். தெரு நாய் கடியால் மக்கள் பாதிக்கப்படும் சம்பவம் என்பது அதிகரித்து வரும் நிலையில் தற்போது ஒரு சிறுமி உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தெரு நாய் கடித்ததில் ரேபிஸ் தொற்று பாதித்து இரண்டு சிறுமிகள் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒரு சிறுமி உயிரிழந்துள்ளார். அதாவது கொல்லம் பகுதியைச் சேர்ந்த நியா பைசல் என்ற 7 வயது சிறுமி கடந்த மாதம் தன் வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு தெரு நாய் கடித்துவிட்டது.

பின்னர் சிறுமியை அருகில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று 3 டோஸ் ரேபிஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். இன்று இறுதி டோஸ் போடப்பட இருந்த நிலையில் திடீரென சிறுமிக்கு நேற்று காய்ச்சல் அதிகமானது. உடனடியாக பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் ரேபிஸ் தொற்று பாதித்திருப்பது தெரிய வந்தது. மருத்துவமனையில் சிகிச்சை வழங்கியும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் தடுப்பூசி போட்டும் மாணவி உயிரிழந்துள்ளது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.