‘கிரிக்கெட்டின் கடவுள்’ என்று ரசிகர்களால் போற்றப்படும் பாரத ரத்னா சச்சின் டெண்டுல்கர், தனது 53-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு உலகெங்கிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், அவரது சிறுவயது நண்பர் வினோத் காம்ப்ளி தெரிவித்த வாழ்த்து சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில்தான் சச்சினும், காம்ப்ளியும் சிறுவயதில் ஒன்றாக கிரிக்கெட் பயின்று உலக சாதனை படைத்தனர். தனது நண்பனின் பிறந்தநாளை முன்னிட்டு அதே மைதானத்திற்குச் சென்ற காம்ப்ளி, அங்கிருந்த சிறுவர்களுடன் அமர்ந்து ஐஸ்கிரீம் வழங்கி கொண்டாடினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “பார்ட்னர் (Partner), இன்று கொண்டாட்டம் கட்டாயம் இருக்க வேண்டும். ஏப்ரல் 24 எனக்கு எப்போதும் ஸ்பெஷலான நாள். மைதானத்தில் நாம் கழித்த அந்த நாட்கள், நமது பார்ட்னர்ஷிப் என அனைத்தும் இன்றும் பசுமையாக இருக்கிறது” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
1973-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-இல் பிறந்த சச்சின் டெண்டுல்கர், சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை விளாசிய ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15,921 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்களும் எடுத்துள்ளார். மொத்தம் 34,357 சர்வதேச ரன்களுடன் கிரிக்கெட் உலகின் அசைக்க முடியாத சக்தியாக விளங்குகிறார்.
சச்சின் நீண்ட காலம் கிரிக்கெட் விளையாடிய நிலையில், காம்ப்ளியின் சர்வதேச பயணம் சில காரணங்களால் முன்கூட்டியே முடிவுக்கு வந்தது. இருப்பினும், பள்ளிப் பருவத்தில் தொடங்கிய இவர்களது நட்பு இன்றும் தொடர்வது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
