
கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம் இண்டி தாலுகா அஞ்சுடகி கிராமத்தைச் சேர்ந்த நிங்கப்பா பூஜாரி (30) என்பவர் தனது மாமியார் நிங்கவ்வா பூஜாரி (70) என்பவரிடம் இருந்து தங்க நகைகள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 13ஆம் தேதி அஞ்சுடகியில் உள்ள மகள் வீட்டுக்கு சென்ற நிங்கவ்வாவை, மருமகன் நிங்கப்பா தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். வழியில் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் இல்லை என கூறி மாமியாரை நடுரோட்டில் நிறுத்திவிட்டு, “நான் பெட்ரோல் வாங்கி வருகிறேன்” என கூறி சென்றார்.
சில நிமிடங்களில் முகமூடி அணிந்த இருவர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் நிங்கவ்வாவின் கண்களில் மிளகாய் பொடி தூவி, வாயில் துணியை திணித்து, கழுத்தில் இருந்த சங்கிலி, கம்மல், வளையல் உள்ளிட்ட 130 கிராம் தங்க நகைகளை பறித்துச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து நிங்கவ்வா கூறியதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
நிங்கப்பாவின் செல்போன் சிக்னல் அந்த இடத்தில் பதிவாகியிருந்தது. இதனால் அவரை பிடித்து விசாரித்த போது, நண்பர் பரசுராமுடன் இணைந்து மாமியாரிடம் இருந்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது உறுதி செய்யப்பட்டது. போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 130 கிராம் தங்க நகைகளை மீட்டனர். தற்போது இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.