மீனவ கிராமங்களில் தற்காலிக பல்நோக்கு சேவை பணியாளர்கள் பணியிடங்களுக்கு அக்டோபர் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பிரதமரின் மீன்வள மேம்பாட்ட திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள கடலோர மீனவ வருவாய் கிராமங்களுக்கு தற்காலிக பல்நோக்கு சேவை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கு மீன்வள அறிவியல், கடல் உயிரியல் மற்றும் உயிரியல் ஆகியவற்றில் ஏதாவது ஒரு பிரிவில் முதுகலை அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இதனைத் தவிர இயற்பியல், வேதியியல் மற்றும் தாவரவியல் ஆகிய பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் முதுகலை அல்லது இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் தகவல் தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தை சென்னை ராயபுரம் சூரிய நாராயண செட்டி தெருவில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.