தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று வெளியிட்டார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. அதே சமயம் 326 அரசு பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகளை அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 8,03,385 பேர் தேர்வு எழுதிய நிலையில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் மாணவ, மாணவிகளுக்கு வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், சான்றிதழ்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் வழங்கப்படுவதால் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளார்.