திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை கிராமம் அமைந்துள்ளது. இங்கு தனியார் நிறுவனம் 9,000 ஏக்கர் நிலங்களை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெற்ற நிலையில் 2028 ஆம் ஆண்டு குத்தகை கால முடிவடைகிறது. இதன் காரணமாக தோட்ட தொழிலாளர்கள் விருப்ப ஓய்வை அறிவிக்கலாம் என அந்நிறுவனம் அறிவித்த நிலையில் பல தொழிலாளர்கள் தங்கள் ஓய்வை அறிவித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஓய்வை அறிவித்த பிறகு 25% நிவாரண தொகையும் வருகிற ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதிக்குள் வீட்டை காலி செய்து உடைமைகளை ஒப்படைத்த பிறகு 75% நிவாரணத் தொகையும் வழங்கப்படும் என்று அறிவித்தனர்.

இந்நிலையில் மறுவாழ்வு வசதி ஏற்படுத்தும் வரையில் ஒரு குடும்பத்திற்கு ரூ.10000 வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதி ஏற்படுத்தும் வரை அவர்களை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கக் கூடாது என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் மாஞ்சோலையில் 700 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் குத்தகை காலம் முடிவடைவதற்கு முன்பாகவே அவர்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் தற்போது கோர்ட் அவர்களை வெளியேற்றக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.