
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அருகே உள்ள பால்காரர் தோட்டம் பகுதியில் ஒரு ஆண் சடலமாக கிடந்தார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த காளிதாசன் என்பது தெரியவந்தது. அவருக்கு திருமணமாகி ஒரு மகனும் மகளும் உள்ளனர். தற்போது காளிதாசன் அம்மாபாளையம் பகுதியில் தங்கி பிரின்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
காளிதாசனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பேருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. அவர்கள் காளிதாசனை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று கட்டையால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனால் தலைமறைவாக இருக்கும் 3 குற்றவாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால் தான் காளிதாசன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.