நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று திடீரென மின்தடை ஏற்பட்டது. அப்போது மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டரும் இயங்கவில்லை. இதனால் அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு மற்றும் உள்நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

அந்த நேரத்தில் பணியில் இருந்த மருத்துவர்கள் மின்தடை காரணத்தினால் தங்களது செல்போனில் உள்ள டார்ச் வெளிச்சத்தின் மூலம் மருத்துவம் பார்த்தனர். மேலும் அரை மணி நேரத்திற்கு பிறகே ஜெனரேட்டர் இயக்கப்பட்டு மின்விநியோகம் சரி செய்யப்பட்டது.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி டீன் கூறுகையில், திடீரென மின் தடை ஏற்பட்டபோது தானியங்கி ஜெனரேட்டரும் செயல்படவில்லை. மேலும் அரை மணி நேரத்திற்கு பின்பு எலக்ட்ரீசியன் வரவழைக்கப்பட்டு ஜெனரேட்டு சரி செய்யப்பட்டது. இதனால் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டதாக கூறினார்.