விழுப்புரத்தில் மருத்துவத் துறையை மேம்படுத்துவது பற்றி சுகாதார பேரவை கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையை மேம்படுத்துவது குறித்த பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, பொது சுகாதாரம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் சுகாதார சேவைகள் மிகப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றால் சமுதாயத்தின் பங்களிப்பு மிகவும் அவசியமானதாகும். அந்த வகையில் அனைத்து குடிமக்களும் தங்களின் உரிமைகள் மற்றும் கடமைகளை குறித்த உணர்வை மேம்படுத்த வேண்டும்.

வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவிலான சுகாதார பேரவை கூட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தக் கூட்டத்தில் மக்களுக்கு தேவையான மருத்துவ வசதி, மருத்துவ கட்டமைப்பு வசதிகள் பற்றி விவாதிக்கப்பட்டு இருக்கின்றது. மாவட்ட அளவிலான கூட்டத்தில் மட்டுமல்லாமல் வட்டார அளவிலான கூட்டத்திலும் பொதுமக்கள் மற்றும் மக்களின் பிரதிநிதிகள் ஆக்கபூர்வமான மருத்துவ துறைக்கு தேவையான வசதிகள் மற்றும் உட்பட்ட அமைப்பு வசதிகள் பற்றி விவாதம் செய்ய வேண்டும்.

அப்போதுதான் இந்த கூட்டத்தின் நோக்கமானது நிறைவேற பயனுள்ளதாக இருக்கும். மேலும் பொது மக்களுக்கு மருத்துவ தேவைகள், உட்கட்டமைப்பு வசதிகள் சார்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதைச் சார்ந்த அறிக்கைகள் மாவட்ட அளவில் கலந்தாய்வு செய்யப்பட்டு மாநில அளவிலான குழுவிற்கு அனுப்பி வைத்து தீர்வு காணப்படும் என பேசினார்.