சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் நடைபெற்ற காவல் நிலைய மரண சம்பவம் தொடர்ந்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மானாமதுரை டிஎஸ்பி தலைமையில் செயல்பட்ட ஒரு ‘தனிப்படை’ போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்ற 25 வயது இளைஞர் அஜித்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

அவரது மரணத்துக்குப் பின்னால் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்டதாக வீடியோ வெளியாகி, சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து டிஎஸ்பி சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட ஆறு போலீசாரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அஜித்குமார் தாக்கப்பட்ட வீடியோவை சத்தீஸ்வரன் என்பவர் வெளியிட்டார். அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது வீடியோ பதிவு செய்து வெளியிட்டதால் மிரட்டல் வருகிறது. என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகின்றனர்.

மனசாட்சி இருப்பதால்தான் வீடியோவை வெளியிட்டேன். அஜித்தை நான் தாக்கியதாக கூட சிலர் கூறுகின்றனர். எனக்கும் என்னை சுற்றி உள்ளவர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என சத்தீஸ்வரன் கூறியுள்ளார்.