
சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள் அவமதிக்கப்பட்டதாக கூறி தற்போது தமிழ்நாடு சுன்னத் ஜமாத் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, நடிகர் விஜய் கலந்து கொண்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு பதிலாக குடிகாரர்கள் மற்றும் ரவுடிகள் கலந்து கொண்டனர். இது இஸ்லாமியர்களுக்கு மிகப்பெரிய அவமானம். அதே நேரத்தில் நிகழ்ச்சியில் பல அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளது.
ஆனால் இதற்கு நடிகர் விஜய் கொஞ்சம் கூட வருத்தம் தெரிவிக்கவில்லை. ஏற்கனவே விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடைபெற்ற போது சரியான ஏற்பாடு செய்யாமல் கலந்து கொண்டவர்கள் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் சிரமப்பட்டனர். இதேபோன்று தான் தற்போது இந்த நிகழ்ச்சியையும் விஜய் சரியான திட்டமிடல் இல்லாமல் நடத்தியுள்ளார். இது போன்ற விபரீதங்கள் விஜய் நடத்தும் நிகழ்ச்சியில் தொடர்கதை ஆகிவிட்டது. மக்களை மக்களாக மதிக்காமல் மாடுகளைப் போன்று நினைப்பதாலும் வெளிநாட்டு பாதுகாவலர்களை வைத்து கொண்ட அலைவதாலும் தான் இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடக்கிறது. மேலும் இனி மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத அளவிற்கு விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.