தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளைக் கடந்துவிட்ட நடிகர் விஜய், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தனது அரசியல் வியூகங்களை வேகப்படுத்தியுள்ளார். தான் ஏன் திமுக-வை மட்டுமே குறிவைக்கிறேன் என்பதற்கு அவர் ஒரு புதிய விளக்கத்தை அளித்துள்ளார். “நடப்பது சட்டமன்றத் தேர்தல், இப்போது ஆட்சியில் இருப்பது திமுக. எனவே அவர்களைப் பற்றிப் பேசுவதுதான் முறை. மற்ற கட்சிகளைப் பற்றிப் பேசி நேரத்தையும், சக்தியையும் வீணடிக்க விரும்பவில்லை” என விஜய் தெரிவித்துள்ளார். சேலத்தைத் தொடர்ந்து இன்று வேலூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடினார். அப்போது, தவெக ஆட்சிக்கு வந்த பிறகு தான் ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் வந்து மக்களைச் சந்திப்பேன் என ஒரு அதிரடி வாக்குறுதியை அளித்தார்.
கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்து.. களப்பணி செய்து ஆட்சியை பிடிப்பது பழைய பாணி.
நீங்க என்னை சி.எம். ஆக்குனாத்தான் கிராமத்தில் தரிசனம் தருவேன்.
அதுவரை நகரங்களில் மட்டுமே என்னை காண முடியும். pic.twitter.com/qLFaPh84ui
— Blue Sattai Maran (@tamiltalkies) February 23, 2026
விஜய்யின் இந்த ‘கிராம விசிட்’ வாக்குறுதியைச் சமூக வலைதளங்களில் சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன் மிகக் கடுமையாகக் கிண்டலடித்துள்ளார். “கிராமம் கிராமமாகச் சென்று, களப்பணி செய்து, மக்களைச் சந்தித்து ஆட்சியைப் பிடிப்பது என்பது பழைய அரசியல் பாணி. ஆனால் விஜய் சொல்வதோ ‘நீங்கள் என்னை முதலில் முதல்வராக்குங்கள், அப்புறம் நான் உங்கள் கிராமத்திற்கு வந்து தரிசனம் தருகிறேன்’ என்கிற பாணியில் இருக்கிறது” எனச் சாடியுள்ளார். மேலும், அதுவரை விஜய்யை நகரங்களில் மட்டுமே பார்க்க முடியும் என்றும், கிராமத்து மக்களை அவர் சந்திக்கப்போவதில்லை என்றும் நக்கல் அடித்துள்ளார். விஜய்யின் இந்த அரசியல் நகர்வும், அதற்கு வந்த விமர்சனமும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
