சென்னையை பொறுத்தவரை எப்பொழுதுமே மிக கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். மக்கள் எப்பொழுதுமே பிசியாக இருப்பார்கள். இங்கு பொது போக்குவரத்துக்காக மின்சார ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை போன்றவை உள்ளது. இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் கூட நடைபெற்று வருகிறது. இதேபோல சில முக்கிய இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. சென்னை சென்ட்ரல், கோயம்பேடு பேருந்து நிலையம், டி நகர் போன்ற இடங்களில் சாலையை கடந்து செல்வதே மிக சிரமமான ஒன்றாக இருக்கும்.

இந்த நிலையில் தான் தற்போது சென்னை சென்ட்ரல் அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த நகரும் படிக்கட்டு வசதியோடு கூடிய நவீன சுரங்க நடைபாதை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மக்கள் எளிதில் செல்ல நுழைவு வாயில் இருபுறமும் நகரும் படிக்கட்டு, கிரானைட் படிக்கட்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது .

இந்த புதிய சுரங்க வழி பாதை பயன்படுத்தி சாலையை கடக்காமல் எளிதாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கூட சென்றுவிடலாம். தற்போது கட்டுமான பணிகள் அனைத்து முடிவடைந்து இயற்கை சார்ந்த ஓவியங்கள் சுவரில் தீட்டப்பட்டு வருகிறது. பணிகள் முடிவடைந்ததும் இந்த சுரங்க நடைபாதை திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.