நீரின்றி அமையாது உலகு என்பது போல நீரின்றி உடலும் அமையாது எனலாம். சம்மர் ஆரம்பித்துவிட்டது. உடல் சூட்டை தணிக்க அதீத நீர் தாகத்தை சமாளிப்பது அவசியமாகும். முறையாக தண்ணீர் குடிப்பதுடன் நீர்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதும் அவசியம்.

  • தர்பூசணி: சம்மர் வந்தவுடனேயே கடை வீதிகளில் நாம் தர்பூசணியை பார்க்கலாம். வாட்டர் மிலன் ஒரு கப் சாப்பிட்டால் அரைக்கப் தண்ணீர் குடிப்பதற்கு சமம். இதைத்தவிர இதில் உள்ள நார்ச்சத்து, விட்டமின் சி, விட்டமின் ஏ, மெக்னீசியம் நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.
  • முலாம்பழம்: ஒரு கப் முலாம் பழத்தில் 90 சதவிகிதம் நீர் இருக்கிறது என கூறப்படுகிறது. அதைத் தவிர நார்சத்தும் இருக்கிறது. முலாம்பழம் பெரும்பாலும் பழமாக சாப்பிட விரும்பாதவர்கள் ஜூஸ் போட்டு குடிக்கலாம். உடல் சூட்டை தணிக்க உதவும் ஒரு பழமாகும்.
  • ஸ்ட்ராபெரி: தண்ணீருடன் சேர்ந்து ஆன்டிஆக்சைடு, விட்டமின், நார்ச்சத்து நிறைந்தவை. ஸ்ட்ராபெரி பழங்கள் இவை இதய நோய் மற்றும் நீரழிவு நோய் உள்ளவர்களுக்கும் நல்லது.
  • ஆரஞ்சு : தாகம் தணிக்கும் பழங்களின் வரிசையில் ஆரஞ்சு பழம் முக்கிய இடம் பிடிக்கிறது. வைட்டமின் சி நிறைந்துள்ள இந்த பழம் இம்யூனிட்டி பெருகவும் உதவுகிறது. அரை கப் தண்ணீரின் அளவு கொண்ட ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களும் உள்ளனவாம்.
  • வெள்ளரிக்காய் : வெள்ளரிக்காயை பச்சைையாக கடித்து சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று. இதனுடன் உப்பும் மிளகாய் பொடியும் சேர்த்து சாப்பிடலாம். ஒரு நாளைக்கு இரண்டு வெள்ளரிக்காய் சாப்பிடுவது சம்மரில் நமது உடல் வெப்பத்தை தணிக்க உதவுகிறது.
  • தயிர் : நமது உடலுக்கு குளிர்ச்சியை தரும். இதனை அப்படியே ஒரு கப் சாப்பிடலாம் அல்லது தண்ணீரில் கலந்து நீர் மோர் குடிப்பது தாகத்தை தணிக்கும். அதனுடன் இஞ்சி, கருவேப்பிலை, நெல்லிக்காய் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியத்திற்கு நல்லது.