இந்தியாவில் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் கோடை வெப்பம் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழிமுறைகளை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி அவசியமின்றி மதியம் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தளர்வான மற்றும் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியே செல்லும்போது கையில் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்ல வேண்டும்.

வெளியே வேலை செய்பவர்கள் தலை மற்றும் முகம் ஆகியவற்றை துணியால் மூடியபடி வேலை செய்ய வேண்டும். மதிய நேரத்தில் குழந்தைகளை வெளியே விளையாட விட வேண்டாம். வெளியில் செல்லும்போது மயக்கம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அடிக்கடி எலுமிச்சை சாறு மற்றும் இளநீர் போன்றவற்றை அருந்த வேண்டும். குளிர்ந்த இடத்திலிருந்து திடீரென வெப்பமான இடத்திற்கு வருவோருக்கு அதிக ஆபத்து ஏற்படும். அவ்வாறு குளிர்ச்சியான பகுதிகளில் வாழ்பவர்கள் கோடையில் சொந்த ஊருக்கு வரும்போது வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.