
நாடு முழுவதும் மக்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். சைபர் குற்றவாளிகள் மக்களை விதவிதமாக வழிகளை கண்டுபிடித்து ஏமாற்றுகின்றனர். இந்த நிலையில் திருநெல்வேலி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, சோசியல் மீடியாவில் தற்போது செயல்படும் புத்தாண்டு வாழ்த்து மோசடி எல்லா இடங்களிலும் நடக்கிறது. உங்களுக்கு தெரியாத செல்போன் நம்பரில் இருந்து வாட்ஸ் அப் எண்ணுக்கு apk file அல்லது லிங்க் செய்தி வரும். அதில் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை அனுப்பலாம் என குறிப்பிடுகின்றனர்.
அந்த apk file அல்லது லிங்கை திறந்து பார்த்தால் செல்போனில் இருக்கும் தனிப்பட்ட விவரங்கள் திருடப்படும். மோசடி செய்பவர்கள் அதன் மூலம் வங்கி கணக்கு விவரங்களையும் தெரிந்து கொள்கின்றனர். எனவே வாட்ஸ் அப்பில் அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து புத்தாண்டு வாழ்த்துக்கள் வந்தால் உஷாராக இருக்க வேண்டும். அப்படி பண மோசடிக்கு ஆளானால் cybercrime.gov.in அல்லது1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உடனே புகார் அளிக்குமாறு போலீசார் கூறியுள்ளனர்.