தெற்கு வங்க கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது புயலாக உருவெடுத்து தமிழகத்தை நோக்கி நகர்வதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

நேற்றைய நிலவரப்படி நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு தென்கிழக்கில் 590 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 710 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 800 கிலோமீட்டர் தொலைவிலும் அது நிலை கொண்டிருந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கில் மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் இன்று புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது புதுச்சேரி சென்னை இடையே கரையை கடக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.

இதனால் கடலூர், மயிலாடுதுறை, புதுச்சேரியின் காரைக்காலில் உள்ள ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவாரூர், அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது.