ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் உணவு தானியங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை இருப்பதாக பரவும் செய்திகளை நம்ப வேண்டாம் என மத்திய அரசு கூறியுள்ளது. இது குறித்து உணவு பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாவது, நாட்டில் உணவு தானியங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை இல்லை.

உண்மையில் போதுமானதை விட அதிகமாக கையிருப்பு உள்ளது. இது போன்ற தவறான செய்திகள் பரப்பப்படுவது எனது கவனத்திற்கு வந்தது. மக்கள் இது போன்ற வதந்திகளை நம்ப கூடாது. நாடு முழுவதும் உணவு தானியங்கள் அத்தியாவசிய பொருட்கள் இருப்பு குறித்து மத்திய அரசு ஆய்வு நடத்தி தேவைக்கு அதிகமாக இருப்பு உள்ளதை உறுதிப்படுத்தியதாக அமைச்சர் கூறியுள்ளார்.

எனவே மக்கள் பீதி அடைய வேண்டாம். சந்தைகளுக்கு விரைந்து சென்று வதந்திகளை நம்பி அதிகமாக செலவு செய்ய வேண்டாம். நிலைமை நமது கட்டுக்குள் உள்ளது. விநியோகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என அமைச்சர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.