மகா சிவராத்திரியானது வருகின்ற பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கின்றது. இந்த மகா சிவராத்திரி அன்று சிவபெருமானை பக்தர்கள் சிறப்பாகவும் மனம் மகிழும் படியும் வழிபட்டு செல்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது “சிவனை வழிபட வரும் பக்தர்கள் கண்டுகளிப்பதற்காக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் ஆன்மீக சொற்பொழிவுகளும் நடத்தப்பட வேண்டும்.

பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி தரிசனம் செய்யும் வகையில் வசதிகள் அனைத்தையும் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் மருத்துவ முகாம்கள், கழிப்பறைகள், காவல்துறை பாதுகாப்பு முறையாக அளிக்கப்பட வேண்டும். அதோடு கலை நிகழ்ச்சிகளுக்குரிய கலைஞர்களை தேர்வு செய்யும் போது அந்தந்த பகுதிகளுக்கு உள்ள கலைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் சிவ பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.