உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் மகா கும்பமேளா நடைபெறுகிறது. இங்கு கடந்த மாதம் தொடங்கிய மகா கும்பமேளா மொத்தம் 45 நாட்கள் நடைபெறும் நிலையில் இந்த மாதம் முடிவடைகிறது. இந்த கும்பமேளா 114 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதால் மகா கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது. கடந்த மாதம் 13-ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி இந்த மாதம் 26 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் இதுவரை கோடிக்கணக்கானவர்கள் நீராடியுள்ளனர். இந்நிலையில் மகா கும்பமேளா நடைபெறும் கங்கை மற்றும் யமுனை ஆறுகள் சங்கமிக்கும் இடம் உட்பட பல்வேறு இடங்களில் ஆற்றின் நீரில் Faecal caliform என்ற பாக்டீரியா அதிக அளவில் கலந்துள்ளதாக தற்போது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதாவது மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் உள்ள ஆறு மனிதர்கள் குளிப்பதற்கு தகுதியானது கிடையாது. இந்த வகை பாக்டீரியா மனிதர்கள் மற்றும் விலங்குகளின் மலக்குடல் பாதையில் உருவாகும் பாக்டீரியாக்கள் ஆகும். இவை அந்த ஆற்றில் மிகவும் அதிக அளவில் இருப்பதால் மனிதர்கள் குளிக்க அது சுத்தமான நதி கிடையாது என்று  மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி, ஜனாதிபதி, பல மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என ஏராளமானோர் இதுவரை புனித நீராடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த அறிக்கைக்கு  தற்போது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது பிரயாக்ராஜ் நதிகள் புனித நீராக கருதப்படும் நிலையில் இப்படி பாக்ட்ரீயா தொற்றுகள் கலந்துள்ளதாக போலி தகவல்கள்ளை  பரப்புவது கண்டனத்திற்குரியது எனவும் இதுபோன்ற போலியான செய்திகளை வெளியிடாமல் உண்மையான தரவுகளின் அடிப்படையில் மட்டும் கருத்துக்களை உருவாக்க வேண்டும் என்றும் சட்டசபையில் பேசியுள்ளார்.

இது பற்றி அவர் கூறியதாவது, ஏற்கனவே 56.25 கோடி பக்தர்கள் பிரயாக்ராஜில் புனித நீராடியுள்ளனர். சனாதன தர்மம், கங்கை மாதா, இந்தியா, அல்லது மஹா கும்பம் குறித்து தவறான தகவல்களை பரப்புவது, இந்த கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை குலைப்பதற்கு சமம்” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்கள் தவறான தகவல்களை நம்பாமல், உண்மையான தரவுகளின் அடிப்படையில் கருத்துக்களை உருவாக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.