
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் மகா கும்பமேளா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை 62 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். உலகம் முழுவதும் மற்றும் இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் மகா கும்ப மேளாவுக்கு புனித நீராடுவதற்காக வரும் நிலையில் இந்த மாதம் 26 ஆம் தேதியோடு நிகழ்ச்சி நிறைவடைகிறது. இந்நிலையில் மகா கும்பமேளாவில் புனித நீராடிவிட்டு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிலர் மீண்டும் ஜீப்பில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். இவர்கள் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென ஜீப் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதில் சாலையின் நடுவே உள்ள தடுப்பின் மீது ஏறி ஒரு மரத்தில் மோதி நெடுஞ்சாலையின் மறுபுறம் குதித்து எதிரே வந்த ஒரு பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 2 பேர் காயமடைந்தனர். மேலும் இது குறித்த தகவலின் பெயரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.