
2023 மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதவுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே இன்று கேப்டவுனில் உள்ள நியூ லேண்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு நடைபெறுகிறது. 2020ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.இதுவரை நடந்த 7 உலகக் கோப்பைகளில் ஆஸ்திரேலியா 5 முறை வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது. மேலும், இந்தியாவுக்கு எதிரான கடைசி 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது இந்த உலகக்கோப்பை தொடரில் 4 லீக் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.
இருப்பினும் தற்போதைய தொடரில் 4 லீக் போட்டிகளில் இந்திய அணியும் 3 போட்டிகளில் வெற்றி பெற்று வலுவாக உள்ளது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா மற்றும் ரிச்சா கோஷ் சிறப்பாக விளையாடி வருகின்றனர். மேலும் பந்துவீச்சில் தீப்தி சர்மா, ரேணுகா சிங் ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர். எனவே ஷபாலி வர்மா, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் உள்ளிட்டோர் துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கு கைகொடுக்க வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை (26/02/2023) கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடும்.
இந்திய மகளிர் அணி :
ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, தேவிகா வைத்யா, ராதா யாதவ், ரேணுகா தாக்கூர், அஞ்சலி சர்வானி, பூஜா வஸ்த்ரகர், ராஜேஸ்வரி கயக்வாட், ஷிகா பாண்டே.
ஆஸ்திரேலிய மகளிர் அணி :
மெக் லானிங் (கே), அலிசா ஹீலி (து.கே), டார்சி பிரவுன், ஆஷ்லே கார்ட்னர், கிம் கார்த், ஹீதர் கிரஹாம், கிரேஸ் ஹாரிஸ், ஜெஸ் ஜோனாசென், அலனா கிங், தஹ்லியா மெக்ராத், பெத் மூனி, எலிஸ் பெர்ரி, மேகன் ஷட், அனாபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வேர்ஹாம்