சென்னை எம்.ஜி.ஆர் நகர் அடுத்த நெசபாக்கம் பகுதியைச் சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர் ராஜேந்திரனின் மகன் வெங்கடேசன் (வயது 28), நேற்று மாலை அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றுள்ளார். போதை தலைக்கு ஏறிய நிலையில், அவர் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளிடம் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுபற்றித் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எம்.ஜி.ஆர் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூப்பாண்டித்துரை மற்றும் போலீசார், வெங்கடேசனை விசாரணைக்காகப் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் அவரது பெற்றோர வரவழைத்து, எச்சரிக்கைக் கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு வெங்கடேசனை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்குச் சென்ற வெங்கடேசன் தனது அறையில் படுத்துத் தூங்கியுள்ளார். ஆனால், இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக 108 ஆம்புலன்ஸிற்குத் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த மருத்துவ ஊழியர்கள் பரிசோதித்தபோது, வெங்கடேசன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் வெங்கடேசனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, விசாரணைக்காகப் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் கொடூரமாகத் தாக்கியதால்தான் வெங்கடேசன் உயிரிழந்தார் என்று அவரது பெற்றோரும் உறவினர்களும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர். போலீஸ் நிலையத்திற்குச் சென்று திரும்பிய வாலிபர் லாக்-அப் மரணம் பாணியில் திடீரென இறந்த சம்பவம் சென்னையில் தற்பொழுது பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
