
ஒடிசாவில் ராணுவ அதிகாரி ஒருவரும், அவரது தோழியும் இழிவு செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன. சிசிடிவி கேமரா வசதி பாரத்பூர் காவல் நிலையத்தில் இல்லை என்பது கண்டறியப்பட்டது. இதுவே சம்பவத்தின் சிக்கலான பகுதியாகிவிட்டது. மேலும், ஒடிசாவில் புதிதாக கட்டப்பட்ட 52 காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா வசதிகள் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
செப்டம்பர் 15ஆம் தேதி, ஒடிசா மாநிலம் பாரத்பூரில் ராணுவ அதிகாரி ஒருவரும் அவரது தோழியும் சாலை ஓரத்தில் மாணவர்களுடன் ஏற்பட்ட மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் இருவரும் அருகிலிருந்த பாரத்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றனர். அப்போது, காவலர்கள் ராணுவ அதிகாரியை தாக்கியதாகவும், அவரது தோழி பாலியல் தொல்லைக்கு உள்ளானதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த சம்பவம் ஒடிசா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், ஒடிசா அரசு இந்த விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது. காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் இல்லாதது சம்பவத்தின் முக்கிய விவகாரமாக மாறியுள்ளது. நாடு முழுவதும் காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவை ஒடிசா காவல் நிலையங்கள் நிறைவேற்றவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, ராணுவ அதிகாரி சம்பவம் நடந்த பாரத்பூர் காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாதது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது, உயர்நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒடிசாவின் மூத்த போலீஸ் அதிகாரி தயாள் கங்க்வார், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பாரத்பூர் காவல் நிலையம் உட்பட 52 புதிய காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா வசதிகள் இல்லையென குறிப்பிட்டார். ஆனால், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அரசுக்கு சிசிடிவி கேமரா வசதிகளை முழுமையாக கொண்டுவர முன்மொழிவு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டு முதல் ஒடிசா முழுவதும் 593 காவல் நிலையங்களில் 11,729 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இருப்பினும், 456 காவல் நிலையங்களில் பொருத்தப்பட்ட 2,266 சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்து உள்ளன என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.