
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாக்வார் மாவட்டத்தில் மோனா பாக்லியா என்ற பெண் வசித்து வருகிறார். லாரி ஓட்டுனரின் மகளான இவர் மூலதேவி என்ற பெயரில் தான் சப் இன்ஸ்பெக்டர் தேர்வில் தேர்ச்சி அடைந்ததாக போலியாவணங்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார். இவர் சப் இன்ஸ்பெக்டர் தேர்வில் தோல்வியடைந்த நிலையில், போலியாவணங்கள் மூலமாக தேர்ச்சி பெற்றதாக கூறி மூலதேவி என்ற பெயரில் விளையாட்டு இட ஒதுக்கீடால் உள்ளே வந்ததாக அதிகாரிகளை ஏமாற்றியுள்ளார்.
இவர் கடந்த 2 வருடங்களாக அங்குள்ள ஒரு போலீஸ் பயிற்சி அகாடமிக்கு தவறாது சென்ற நிலையில் மூத்த அதிகாரிகளுடன் அடிக்கடி செல்பி எடுத்து தன் சமூக வலைதளங்களில் பகிர்வார். அதோடு காவல்துறை அதிகாரியாக சமூக வலைதளத்தில் ஊக்கமளிக்கும் ரீல்களையும் பதிவிட்டு வந்தார். அதுமட்டுமின்றி கருத்தரங்கங்களிலும் கலந்துகொண்டு விழிப்புணர்வு கொடுத்த நிலையில் அவரது நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு சக பயிற்சி அதிகாரிகள் உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கவே இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
இது பற்றிய விசாரணையில் மோனா தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு குடும்பத்தினரை திருப்தி படுத்துவதற்காகவும் போலீஸ் வேலையில் கிடைக்கும் மரியாதைக்காகவும் இந்த மோசடியை செய்ததாக கூறினார். அவரது வீட்டில் இருந்து 7 லட்சம் ரொக்க பணம், போலியாவணங்கள் மற்றும் போலீஸ் சீருடைகள் போன்றவற்றை போலீஸார் பறிமுதல் செய்த நிலையில் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.