
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்ற சூழ்நிலையில், சமாஜ்வாடி கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், மக்கள் அமைதியுடன் இருந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நெடு இரவு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள தனது கருத்தில், “நமது துணிச்சலான ராணுவத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். நாங்கள் அனைவரும் நாட்டுடன் இருக்கிறோம்” என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சமூக வலைதளங்களில் பரவும் தவறான செய்திகள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பகிர்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், அவை நாட்டின் எதிரிகளால் திட்டமிட்டு பரப்பப்படும் விஷத்துளிகள் என்றும் எச்சரித்துள்ளார்.
“நெருக்கடியான காலங்கள் மேலும் ஞானத்தையும் பொறுப்பையும் கோருகின்றன. இந்த நேரத்தில் ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்” எனவும் கூறியுள்ளார். மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும், மற்றவர்களும் அமைதியாக இருக்க ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.