படையெடுப்பும் குண்டுவீச்சும் நிறைந்த 12 நாள் இராணுவ மோதலுக்கு பிறகு, இஸ்ரேலும் ஈரானும் இடையிலான போர் நிறைவு பெற்ற நிலையில், ஈரானின் தலைமைத் தலைவர் அயதுல்லா அலி கொமேனி நேற்று (ஜூலை 5) முதன்முறையாக பொதுமக்கள் முன்னிலையில் தோன்றியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஈரானிய மக்கள் பெரும் உற்சாகத்துடன் அவரை வரவேற்றனர். “எங்கள் தலைவருக்காகவே நரம்புகளில் ரத்தம் பாய்கிறது” என உணர்ச்சி தூண்டும் முழக்கங்கள் எழுந்தன. பாதுகாப்பு வளையத்துடன் அவர் மேடையில் வருகைதந்தபோது, ஆயிரக்கணக்கான மக்கள் கைதட்டியும், கூவியழைத்தும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஈரான் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது எனக்கூறி, கடந்த மாதம்  13ம் தேதி இஸ்ரேல் விமானப்படை ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் போர்டோவில் உள்ள நிலத்தடி அணு உற்பத்தி மையம் உள்ளிட்ட மூன்று முக்கிய நிலையங்கள் கடுமையாக சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவிக்க, சர்வதேச அளவில் அதிர்வலைகள் கிளம்பின.

“>

 

இதற்கு பதிலடி என ஈரானும் தொடர்ந்து இஸ்ரேலின் இராணுவ முகாம்கள் மீது குண்டுவீசும் தாக்குதல்களை நடத்தியது. பிறகு, அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக தங்கள் போர் விமானங்களை ஈரான் நோக்கி திருப்பி தாக்குதல் நடத்தியது. இரு தரப்பும் பலத்த சண்டையை முன்னெடுத்ததையடுத்து, சர்வதேச தரப்பில் பல்வேறு அழுத்தங்கள் ஏற்பட்டன.

தொடர்ந்த இந்த 12 நாள் பயங்கர மோதலுக்குப் பிறகு, இரு நாடுகளும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, கடந்த வாரம் அதிகாரபூர்வமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போதைக்கு அமுலில் இருந்து வந்தாலும், இரு தரப்பிலும் பதற்றம் நீங்கவில்லை என சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அணு ஆயுத விஷயத்தில் ஈரானின் நிலைப்பாட்டும், இஸ்ரேலின் எதிர்வினைகளும்,  உலக நாடுகளின் ஈடுபாடும் வருங்காலத்தில் இந்த பிரச்சினை மீண்டும் வெடிக்கும் வாய்ப்பை உள்ளடக்கியதாகவே உள்ளது.