இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் அவரது முன்னாள் மனைவி ஹசின் ஜகான் இடையேயான ஜீவனாம்ச வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு ஷமி, ஹசின் ஜகானைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், 2015-ல் இவர்களுக்கு ஆர்யா என்ற மகள் பிறந்தார்.

குடும்பப் பிரச்னை காரணமாக இருவரும் 2018-ல் பிரிந்தனர். இதனையடுத்து, முகமது ஷமி, தனது முன்னாள் மனைவி மற்றும் மகளுக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதில் ரூ.2.5 லட்சம் மகளின் கல்விச் செலவுகளுக்காக என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்தச் சூழலில், தனக்கும் தனது மகளுக்கும் வழங்கப்படும் ஜீவனாம்சத் தொகையை அதிகரிக்கக் கோரி ஹசின் ஜகான் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். முகமது ஷமியின் வருமானம் மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறையைக் கருத்தில் கொள்ளும்போது, மாதம் ரூ.4 லட்சம் போதுமானதாக இல்லை என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “மாதத்திற்கு ரூ. 4 லட்சம் என்பது பெரிய பணம் இல்லையா?” என்று ஆச்சரியம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, முகமது ஷமி மற்றும் மேற்கு வங்க அரசு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் அடுத்த விசாரணை டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.