நந்திவரம் கூடுவாஞ்சேரி திரௌபதி அம்மன் கோவில் தெருவில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் திமுக பிரமுகர். இவரது மகன் டெல்லி பாபு என்ற விக்கி சேலையூர் பாரத் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நந்திவரம்- கூடுவாஞ்சேரி பகுதியில் திமுக மாணவரணி நிர்வாகியாகவும் இருந்துள்ளார். நேற்று மாலை விக்கி தனது நண்பர் சக்தி பாலன் என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வாங்கியுள்ளார். இதனை அடுத்து எருமையூர் என்ற இடத்தில் சர்வீஸ் சாலையில் பைக் ஓட்டுவது போல பல வடிவங்களில் போட்டோ சூட் எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது முத்து குமரன் நகர் பகுதியைச் சேர்ந்த தேஜாஸ் என்பவர் போட்டோஷூட் எடுப்பதை கவனித்து கொண்டே வந்தார். அவர் எதிர்பாராதவிதமாக விக்கி மீது மோதினார். இதனால் படுகாயம் அடைந்த விக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று விக்கியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஹெல்மெட் அணியாமல் விக்கி பல்வேறு கோணங்களில் பைக் ஓட்டிக்கொண்டே போட்டோ சூட் எடுத்ததால்தான் இந்த சம்பவம் நடந்ததாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.