
புனே நகரை சேர்ந்த ஐபிஎஸ் தேர்வாளரான பூஜா மாதவ் வவால், தனித்துவமான ‘தூக்க பயிற்சி’ திட்டத்தில் கலந்து கொண்டு இந்தியா முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை பின்னுக்குத் தள்ளி ‘ஆண்டின் ஸ்லீப் சாம்பியன்’ பட்டத்தை வென்று புகழ் பெற்றுள்ளார். வேக்ஃபிட் நிறுவனம் நடத்திய ‘ஸ்லீப் இன்டர்ன்ஷிப்’ போட்டியின் நான்காவது சீசனில் கலந்து கொண்ட அவர், 60 நாட்கள் தொடர்ந்து தினமும் 9 மணி நேரம் தூங்கி, அதற்காக ரூ.9.1 லட்சம் பரிசுத் தொகை பெற்றுள்ளார்.
இந்த திட்டத்தின் நோக்கம், தூக்கத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு புரிய வைப்பதுதான். தூக்கத்தின் தரம், ஒழுங்கு, தூங்கும் நேரம் ஆகியவற்றை கண்காணிக்க வெக்ஃபிட் நிறுவனத்தின் மெத்தைகள் மற்றும் டிஜிட்டல் டிராக்கர் கருவிகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பயிற்சியாளரும் வீட்டிலிருந்தே 60 நாட்கள் தங்களை வைத்து சோதனை செய்து, தூக்க பழக்கத்தை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளிலும், சவால்களிலும் பங்கேற்றனர்.
பூஜா மாதவ் 91.36 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். அவருடன் 14 பயிற்சியாளர்களும் பயிற்சியை முடித்து தலா ரூ.1 லட்சம் வென்றுள்ளனர். இந்த ஸ்லீப் இன்டர்ன்ஷிப் திட்டம் 2019 முதல் தொடங்கி நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ளது. தற்போது ஐந்தாவது சீசனுக்கான விண்ணப்பங்கள் திறந்திருக்கும் நிலையில், 22 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வின் மூலம், தூக்கம் என்பது நம் வாழ்க்கையின் ஒரு முக்கியமான பங்காக பார்க்கப்பட வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு உருவாகி வருகிறது. வேலை-வாழ்க்கை சமநிலையை தேடும் இளைஞர்கள், நல்ல தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை ஊக்குவிக்கிறது இந்த பயிற்சி.