சென்னையில் போகி பண்டிகையை  முன்னிட்டு பழைய பொருட்களை எரிப்பதனால் ஏற்படும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக பழைய பொருட்களை வைத்திருக்கும் மக்கள் அதனை தூய்மை பணியாளர்களிடம் வழங்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னையில் ஓன்று முதல் 15 மண்டலங்களில் உள்ள அனைத்து வார்டுகளிலும் போகி பண்டிகைக்காக பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லாத பொருட்களான ரப்பர் ட்யூப், பிளாஸ்டிக், டயர், பழைய துணி போன்ற பொருட்களை எரிப்பதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில் குப்பை சேகரிக்கும் வாகனங்களில் ஜனவரி 7-ஆம் தேதி முதல் ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் எரிக்க  நினைக்கும் பொருட்களை நாளை முதல் மாநகராட்சி தூய்மை பணியாளரிடம் வழங்கலாம். இதனையடுத்து பயன்படுத்த முடியாத பொருட்கள் மணலில் உள்ள இன்ஷினரேட்டர் ஆலையில் எரிக்கப்படுகிறது. இதில் புகை வெளியே வராது. சாம்பல் மட்டுமே வெளியே வருகிறது. மேலும் அந்த சாம்பலும் கற்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.